“மகிழ்ச்சியின் மறுபெயர் சுற்றுலா” - இன்று உலக சுற்றுலா தினம்.!
உலகை சுற்றிவரவேண்டும் என்ற ஆசை இல்லாத நபரே இருக்க முடியாது. மன அழுத்தம், தீராத சோகம் என எல்லாவற்றுக்குமான மாமருந்து சுற்றுலா செல்வதுதான் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.
இந்த ஆண்டு நிச்சயமாக நம்மால் சுற்றுலாவின் அத்தியாவசியத்தை உணர்ந்திருக்க முடியும். ஏனென்றால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக உலகின் அத்தனை சுற்றுலா தளங்களும் மூடிக்கிடக்கிறது. நோய்த்தொற்று பயம் மற்றும் போக்குவரத்து இல்லாத காரணத்தால் உள்நாட்டு சுற்றுலா செல்வதற்குக்கூட வாய்ப்பில்லாத நிலையில் உள்ளனர் மக்கள்.
புதிய விசயங்களை கற்றுக்கொள்ளவும், பழைய கவலைகளை விட்டுத்தள்ளவும் எப்போதும் களம் அமைப்பது சுற்றுலா மட்டுமே. எங்குமே செல்ல முடியாமல் வீட்டில் அடைபட்டிருக்கும் இந்த நாட்களில் நாம் ஒவ்வொருவருமே சுற்றுலாவின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம்.
கடந்த 1970ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 27ஆம் தேதியை ‘சர்வதேச சுற்றுலா தினமாக’ ஐநா சபை அங்கீகரித்தது. இது உலக சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் 1980ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போது சுற்றுலா என்பதுதான் உலகின் மிகப்பெரிய தொழில்துறையாக உள்ளது, உலக பொருளாதாரத்தில் இரண்டாவது பங்களிப்பு சுற்றுலாவினால்தான் கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
உணவகம், தங்குமிடம், பொழுதுபோக்கு தளங்கள், போக்குவரத்து, வணிக விற்பனையகங்கள் என 5 முக்கிய துறைகளை உள்ளடக்கியது சுற்றுலாத்துறை. உலக அளவில் பல கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதும் சுற்றுலாதான்.
சுற்றுலாவை மேம்படுத்தி பொருளாதாரத்தை அதிகளவு ஈட்டிய நாடுகளில் ஸ்பெயின் முதலிடமும், பிரான்ஸ், ஜெர்மனி 2, 3வது இடத்தையும் பிடிக்கின்றன. உலக அளவில் சுற்றுலாவில் இந்தியா 40வது இடத்தில்தான் இருக்கிறது, சீனா 13வது இடத்தில் இருக்கிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது சுற்றுலா . வெறும் பாலைவனத்தை மட்டும் வைத்துக் கொண்டு துபாய் சுற்றுலாவில் அதிக வருவாய் ஈட்டி வருகிறது.
சின்னஞ்சிறிய நாடான சிங்கப்பூர், எந்தவிதமான பெரிய வளமும் இல்லாமல் சுற்றுலாவில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் மிளிர்கிறது.சில நாடுகளில் சுற்றுலா துறையை நம்பி தான் நாட்டின் பொருளாதாரமே இருக்கிறது.
2010ன் கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு வகையான காலநிலைகள், மக்கள், கலாச்சாரம்,கலைகள்,மொழிகள் என்று சுற்றுலாவுக்கான அத்தனை வாய்ப்புகளையும் உள்ளடக்கிய துறை.
இந்தியஅரசு இன்னும் சிறப்பான திட்டங்களை அறிவித்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தினால் விரைவில் டாப் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா வரும். தமிழகத்திலும் தொல்லியல் சின்னங்கள், குளிர்பிரதேசங்கள், சிறப்புமிக்ககோவில்கள், கடற்கரைகள், மலைப்பிரதேசங்கள் என சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. தற்போது இந்திய மாநிலங்களில் சுற்றுலாத்துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் இருந்தாலும், இன்னும் முயற்சி செய்தால் நிச்சயம் முதலிடம் பெறலாம்.
மக்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் தங்களின் வசதிவாய்ப்பிற்கு ஏற்ப உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா மேற்கொண்டால் புதிய வெளிச்சம் பிறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த நோக்கத்துடன்தான் இந்தநாள் கொண்டாடப்படுகிறது.